424. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 3
டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.
அடுத்துப் பேசியவர் தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர் திரு.நடராஜன் அவர்கள். AIR-க்காக 1970-இல் ராஜாஜி நகரில் சுஜாதாவை 20 நிமிடங்கள் பேட்டி கண்டதை நினைவு கூர்ந்து, வாத்தியார் அதை ஒரு மாடல் பேட்டி என்று பாராட்டியதையும் குறிப்பிட்டார். திருமதி சுஜாதாவை meticulous என்று பாராட்டிவிட்டு, பெங்களூரில் வாத்தியாருடன் வாரம் ஒரு திரைப்படம் பார்த்த நாட்கள் பற்றியும், ஒரு நாடக விழாவுக்காக வாத்தியாரின் "என்றாவது ஒரு நாள்" கதையை நாடகமாக்கியது குறித்தும், வாத்தியாரின் சங்கீத ஞானத்தை சிலாகித்தும் நடராஜன் பேசினார்.
ஜெ.காவும், சுஜாதாவும் தானும் ஓர் இரவு முழுதும் கென்னத் லாட்ஜில் ஒரு அறையில் இலக்கிய அரட்டை அடித்த நிகழ்வு பற்றி நடராஜனும் நகைச்சுவையாகப் பேசினார். ஜெ.கா (சாவி வாங்கித் தரும் சாம்பார் சாதத்தை எப்போது வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று கூறியபடி!) வாத்தியாரையும் நடராஜனையும் வற்புறுத்தி இழுத்துச் சென்று, அவர் மட்டும் இரவு முழுதும் தண்ணியடித்தபடி, தங்களை பட்டினி போட்டதை நினைவு கூர்ந்த நடராஜன், அதிகாலையில் ஜெயகாந்தனைப் பார்த்து, "எவ்வளவு நேரம் சிப்ஸ் சாப்பிட்டு பொழுது போக்குவது?" என்று தாங்க முடியாமல் கேட்க, பின்னர் மூவரும் இம்பாலா ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட மலரும் நினைவுகளை சுழல விட்டார் :)
வாத்தியார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் என்றும், தான் அவரது எழுத்துகளுக்கு தீவிர விசிறி என்றும், அதே சமயம் வாத்தியாரின் பழகும் தன்மைக்கும், நற்குணங்களுக்கும் அடிமை என்றும் உணர்ச்சிகரமாகப் பேசி தன் உரையை நிறைவு செய்தார்!
(இயல்பாகவும் நகைச்சுவையாகவும் பேசிய) பேராசிரியர் ஞானசம்பந்தன் தான் பேச்சாளர் ஆனதற்கு வாத்தியார் தான் இன்ஸ்பிரேஷன் என்றும், வாத்தியார் எழுத்தில் கடைபிடித்த வேகத்தையும், சுருக்கத்தையும் தான் தனது பேச்சில் கடைபிடிப்பதாகவும் தன் பேச்சைத் தொடங்கினார். ஞானசம்பந்தன் ஒரு முறை வாத்தியார் வீட்டுக்குச் சென்று எது பற்றியோ நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தபோது, சுஜாதா தனது மனைவியை அழைத்து, "இவர் எவ்வளவு அருமையா பேசறார், பாரேன்!" என்று கூறியபோது, திருமதி சுஜாதாவோ தான் பேராசிரியரை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்ப்பதால் தனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை என்று புன்னகைத்தாராம் :) இந்த பாராட்டால் தான் மிக்க மகிழ்ச்சியுற்றதாகவும், வாத்தியார் கள்ளம் கபடு இல்லா உள்ளம் கொண்டவர் என்பதற்கு இது சான்று என்றும் பேராசிரியர் குறிப்பிட்டார் ! ஞானசம்பந்தனின் பேச்சை கமல் மிகவும் ரசிப்பதாக ஒரு மேடைக் குறிப்பு வரவே, பேராசிரியர் தன் பேச்சைத் தொடர்ந்தார் !
வாத்தியாரின், "சசி காத்திருக்கிறாள்" என்ற சிறுகதையை, தான் வாசித்ததில் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதுவதாகவும், வாத்தியார் ஆழமான விவரங்களை தெரிந்து வைத்திருப்பவர் (இதற்கு உதாரணமாக, ஒரு முறை வாத்தியாருடன் மதுரை அழகர் கோயிலுக்கு ஞானசம்பந்தன் சென்றபோது, மதுரைக்காரரான பேராசிரியருக்கேத் தெரியாத விஷயமான, 'ஆண்டாள் பள்ளிப்படுத்தப்பட்ட இடம் அழகர் கோயில்' என்பதை சுஜாதா சொன்னபோது தான் ஆச்சரியப்பட்டதை குறிப்பிட்டார்!) என்றும் கூறினார்.
வாத்தியாரின் மர்ம நாவலான நிர்வாண நகரத்தை சிலாகித்துப் பேசிய ஞானசம்பந்தன், ஒரு கதையில் வசந்த் கணேஷைப் பார்த்து கூறும், "அவ நடையப் பாருங்க பாஸ், புதுமைப்பித்தன் நடை தோத்துரும்" என்று வாத்தியார் 'போகிற போக்கில்' எழுதியிருப்பதையும், 'திமலா' என்ற அறிவியல் புனைவுக் கதையை ஒரு பாசுரத்துடன் வாத்தியார் நிறைவு செய்த நேர்த்தியையும் சுட்டிக் காட்டினார் ! வாத்தியார் போல அறிவியல்/தொழில்நுட்பம் கற்றவர்கள் தமிழுக்கு வர வேண்டும் என்ற வேண்டுகோளோடு தன் இரங்கல் உரையை நிறைவு செய்தார்.
வாத்தியார் தனது 60 ஆண்டு கால நண்பர் என்று நெகிழ்ச்சியுடன் தன் பேச்சை ஆரம்பித்த கணையாழியின் கஸ்தூரி ரங்கன், அவருடன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடிய பால்ய பருவத்தை நினைவு கூர்ந்தார்! தான் சுஜாதாவின் உடலுக்கு மரியாதை செலுத்தப் போகாததற்குக் காரணம், தன் நினைவில் அவரது மலர்ந்த முகமே என்றும் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என்ற கஸ்தூரி ரங்கன், கணையாழி நடத்தி வந்த 30 ஆண்டு காலத்தில், இலக்கிய ரீதியாக தாங்கள் எவ்வளவோ பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
எழுத்துக் கடமை (முக்கியமாக, ஆன்மிகம் சார்ந்த) முடிவுறாத நிலையிலேயே, சுஜாதா காலமாகி விட்டதாக தான் உணர்வதாக க.ர. கூறினார். சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கும் "யுகமாயினி"யில் கடைசி 16 பக்கங்களை "கணையாழி பக்கங்கள்" என்று ஒதுக்கி, அதில் சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, க.ர மற்றும் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் எழுத இருந்ததாக் குறிப்பிட்ட க.ர, ஓர் இதழுக்கு மட்டுமே சுஜாதா எழுத முடிந்தது (இது தான் வாத்தியார் கடைசியாக எழுதியது!) துரதிருஷ்டமே என்று கூறினார். வாத்தியாரின் மறைவுக்குப் பிறகு, "Best of Sujatha" என்ற தலைப்பில் யுகமாயினியில் இ.ரா.முருகன் எழுதுவார் என்று க.ர. கூறி தன் பேச்சை நிறைவு செய்தார்.
கமலஹாசன் தான் எழுதியதை எல்லாம் வாசிக்க / விமர்சிக்க வைத்து வாத்தியாரை படுத்தியிருப்பதாகவும், இனிமேல் தான் எழுதுவதை யாரிடம் காண்பித்து சரி செய்து கொள்வது என்றும் நெகிழ்ச்சியாகக் கூறினார். வாத்தியாரின் (மொழிபெயர்க்கப்பட்ட) சில கதைகளை மலையாள வாசகர்கள் சிலாகித்துப் பேசும்போது (தமிழில் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதற்காக) தான் கோபம் அடைந்ததாகவும், வாத்தியாரின் இரங்கல் கூட்டத்துக்கு இவ்வளவு பேர் வந்து மரியாதை செலுத்துவது வாசகத் தரத்தை உயர்த்திக் காட்டுகிறது என்றும் கூறிய கமல், இரங்கல் கூட்டத்துக்கு வந்த வாசகர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
வாத்தியாரிடம் (அவரது விரிந்த வாசிப்பினால்) மேல்நாட்டுத் தாக்கம் இருந்தபோதிலும், அந்த வாசிப்பில் பெற்றதை, இந்தச் சூழலுக்கேற்ப தமிழாக்கம் செய்ததால் தான் அவர் எழுத்து பெருவெற்றி அடைந்தது என்றும், ஒரு காலத்தில் வாத்தியாரைப் பார்ப்பதற்காகவே தான் பலமுறை பெங்களூருக்கு சென்றிருப்பதாகவும் கமல் கூறினார். முதன்முதலில் வாத்தியாரை சந்திப்பதற்கு முன்னால், அவர் வீட்டுக்கு தொலைபேசிய கமல், "Can I speak to Sujatha?" என்று வினவ, ஒரு பெண்குரல், "Speaking, நீங்க யார் பேசறது ?" என்றவுடன் ராங் நம்பர் என்று இருமுறை கமல் ·போனை வைத்து விட்டாராம் ! மறுபடியும் நிதானமாக டயல் செய்து, "Can I speak to writer Sujatha?" என்று கேட்க, திருமதி சுஜாதா, தொலைபேசியை கணவரிடம் தந்தாராம் :)
கமல் தனது வெளிப்படையான ஸ்டைலில், ஒரு கதையில் வாத்தியாரின் "ஏராளமான மார்புகள்" என்ற சொற்பிரயோகத்தைக் கண்டு தான் அசந்து விட்டதாகக் கூறினார் !!!
வைரமுத்து, தங்கர் பச்சான், கனிமொழி, ராமகிருஷ்ணன், தேசிகன், சுதாங்கன் ஆகியோர் பேசியதையும் எழுதினால், இப்பதிவு நீண்டு விடும் அபாயம் இருப்பதால், அடுத்த பதிவில் இரங்கல் கூட்ட நிகழ்வின் தொகுப்பை நிறைவு செய்கிறேன். தயவு செய்து காத்திருக்கவும் !
6 மறுமொழிகள்:
Sujatha Sir, Rest in Peace !
என்னைப் போல் வர முடியாதவர்களுக்கு இப்படி விபரமாகத் தருவதற்கு நன்றி.
நன்றி
என்ன பாலா இது?
எங்களால் வரமுடியாப்போச்சே. இப்படி பதிவுகளிலாவது நடந்ததை முழுமையாத் தெரிஞ்சுக்கலாமேன்னு நினைச்சேன்.
மற்றவர்களும் என்ன சொன்னார்கள்னு
எழுதுங்களேன். புகழ்ந்துதான் சொல்லி இருப்பாங்கன்னாலும்..... என்னதான் சொல்லி இருப்பாங்கன்ற ஆர்வம்தான்.
இன்னும் நாலைஞ்சு பகுதியா எழுந்துங்க.
பாலா ஸார்.. எதையும் குறைத்து, எடிட் செய்து விடாதீர்கள்.. முழுமையாக எழுதுங்கள்.. படிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.. இதெல்லாம் நாளைய பத்திரிகை உலகில் இது ஒரு ஆவணமாகச் செயல்படப் போகிறது..
நன்றி..
கொத்ஸ், பாபா, துளசி, உண்மை தமிழன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. முடிந்த அளவுக்கு விளக்கமாகவே பதிந்துள்ளேன்.
Post a Comment